உன்வாசம் வேண்டி
உயிரை எடுக்கிறது
தன்வாசம் போதாத்
தளிரிளம்பூ; - என்றன்
சிபாரிசை வேண்டிச்
செருமிடுது; தன்னின்
அபாக்கியம் சொல்லி
அழுது!
அந்திவான் கூட
அடம்பிடிக்கும் உன்கன்னம்
தந்தநா ணச்சிவப்பைத்
தான்பெறவே; - சொந்தமாய்
உன்குளிர்ச்சி வேண்டி
ஒருகாலில் ஊதைநிற்கும்
தன்குளிர்ச்சி மொத்தம்
தவிர்த்து!
'ஏழாங்கல் ஆட
எடுத்துக்கொள் என்னுடைய
கூழாங்கல், மாற்றாய்க்
கொலுசுகொடு' - தாழாத்
தலைதாழ்த்தி ஆறு
தவம்கிடக்கும்; தண்ணீர்
அலைத்தூது விட்டு
அலுத்து!
தேயா நிலாவுன்போல்
தேயா திருப்பதற்கே
ஓயாமல் ஆராய்ந்தே
ஓய்ந்தநிலா – ‘நேயா!நீ
கேட்டால் ரகசியம்
கிட்டத் தருவாள்உன்
வீட்டாள்’, எனப்புலம்பும்
வீற்று!
நன்றாய் இசைபூக்கும்
நாணப்புல் லின்வகையில்
ஒன்றான மூங்கிலழும்
உட்கார்ந்து; - ‘மென்குரலாள்
தன்குரலைத் தந்தால்
தரிப்பேன் உயிர்இன்றேல்
இன்குரலாள் முன்னிறப்பேன்’,
என்று!
வானவில் பாவம்
வளைந்தே ஒடிகிறது
ஏனவள் போல்நிறத்தில்
இல்லையென்று; - தேனருந்த
பூவிட்டுன் வீடு
புகுந்ததே பொன்வண்டு;
ஏவியது நானா?
இலை!
உன்றன் மனம்குளிர
ஒன்றும்நான் இப்படி
மென்று கவிகள்
விழுங்கவில்லை; - இன்றளவும்
நானறிந்த வற்றைத்தான்
நன்றாய் எடுத்துரைத்தேன்;
ஜானகி! சங்கோ
ஜமா?
.jpg)