ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

அமுதன் குறள்! 4

பின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய்
அன்னை கழுத்தூஞ்சல் ஆம்! (21)

ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத்
தேடி அலைவாள் திகைத்து! (22)

தாய்மொழியில் அம்மாவை அம்மா எனவழைப்பாய்
வேற்றுமொழி தேடாய் விடு! (23)

வாயார நீயழைத்தால் வந்துமுத்தம் சிந்தாளோ?
போயாரக் கட்டிப் புகல்! (24)

முத்தங்கள் முந்நூறாய் தாய்வழங்கப் பூத்திடுவாய்
முத்துப்பல் காட்டி முகம்! (25)

சேரா உறவுகளை சேர்த்துவைக்க நீபிறந்தாய்
தீராப் பகையுணர்வைத் தீர்த்து! (26)

பகையுணர்வு மிக்காரும் பிள்ளாய்!நீ பேச
நகையுணர்வு கொள்வார் நயந்து! (27)

பகையும் பொடிபடும் பல்லுறவும் கூடும்
முகையுன் சிரிப்புக்கு முன்! (28)

பெற்றோர் படுந்துயர்க்குப் பிள்ளையுன் தீஞ்சொல்லே
உற்ற மருந்தென் றுணர்! (29)

தாய்தன் மடியே தரணியென் றெண்ணாது
போய்விளை யாடு புறம்! (30)

7 கருத்துகள்:

  1. அனைத்தும் முத்துக்கள் .
    மிக அருமை. ரசித்து சிலாகித்தேன் .
    தாய்மை சிரிக்கிறது இங்கே .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தித்திக்கும் குறள் அமுதம்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் திகழ் நலமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு